
கிறிஸ்து தோன்றுவதற்கு 800 ஆண்டுகளுக்கு முன் ஒரு சின்னஞ்சிறு கிராமமாக இருந்த இந்த இடம் பின்னாளில் உலகின் பெரும்பகுதியை ஆட்சி புரிந்த ரோமப் பேரரசின் தலைநகராகத் திகழ்ந்தது.
இயேசுபிரான் பிறந்தது ஜெருசலேம் என்றாலும் இப்போது இந்த ரோம் நகரம்தான் கிறிஸ்துவர்களின் புனிதத்தலமாகவும், தலைமையிடமாகவும் திகழ்கின்றது. உலகினரால் "சாசுவதமான நகரம்' என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது.
இத்தாலி நாட்டின் தலைநகரமாக விளங்கும் ரோமாபுரி என்ற ரோம் நகரம் டைபர் நதிக் கரையில் அமைந்துள்ளது.
இந்நகருக்கு சுற்றுலா செல்ல ஏற்ற மாதங்கள் ஏப்ரல், மே மற்றும் செப்டம்பர், அக்டோபர் ஆகும். புனித பீட்டர் தேவாலயம் கிறிஸ்துவ மதத்தின் தாயகம். புனித பீட்டர் மறைந்தபின் அவரது உடல் புதைக்கப்பட்ட இடம். இது வாடிகன் நகரில் உள்ளது.
முதல் கிறிஸ்தவ அரசரான கான்ஸ்டாண்டின் என்பவரால் கட்டப்பட்டது. 15-ஆம் நூற்றாண்டில் இது புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோராண்டிலும் கோடிக்கணக்கான மக்கள் உலகெங்கிலுமிருந்து இங்கு வந்து செல்கின்றனர்.
உலகின் தலைசிறந்த கலைஞர்கள் இத்திருப்பணியில் பங்கு பெற்றுள்ளனர். தேவாலயத்தின் மாடக்கூடு, உலகமே போற்றும் மைக்கேல் ஏஞ்சலோ வடிவமைத்ததாகும். உலகின் மிகப்பெரிய தேவாலயம் இதுவே. இங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட பிரார்த்தனை மேடைகள் அமைந்துள்ளன. உள்ளறைகளில் காணப்படும் அலங்கார வேலைப்பாடுகள் காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தும்.
கொலோசியம்: பண்டைய ரோமானியப் பேரரசின், ஆற்றலுக்கும், சிறப்புக்கும் அடையாளமாக இன்றும் திகழ்வது வட்ட வடிவில் அமைந்துள்ள கொலோசியம் விளையாட்டு அரங்கம்தான். கி.பி. 80-ஆம் ஆண்டில் வெஸ்பாசியன்ஸ் அரசரால் இது கட்டப்பட்டது. இதன் அருகில் மிகவும் பிரம்மாண்டமான கொலோசியம் சிலை உள்ளது. அப்பெயர்தான் விளையாட்டரங்கிற்கும் சூட்டப்பட்டுள்ளது.
இந்த அரங்கம் 188 மீட்டர் நீளமும், 156 மீட்டர் அகலமும், 48 மீட்டர் உயரமும் கொண்ட இந்த அரங்கத்தில் 6,000 பேர் அமரலாம்.
இந்த விளையாட்டரங்கில் மன்னர்கள், பிரதானிகள், பொதுமக்களை மகிழ்விக்க வீர தீர விளையாட்டுகளை நடத்துவது வழக்கம்.
பூகம்பத்தால் இந்த அரங்கத்தின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளது.
காம்பிடோக்லியோ மலை: ரோம் நகரின் ஏழு குன்றுகளில் ஒன்று. இதனை காபிடோலின் மலை என்றும் அழைப்பர். ரோமானியப் பேரரசர்கள் காலத்தில் மதம் மற்றும் அரசியல் மையமாகத் திகழ்ந்தது.
இங்கு ரோமானியர் பல ஆலயங்களைக் கட்டினர். அவற்றுள் ஜுபிடருக்காகக் கட்டப்பட்ட ஆலயம் மிகப் பெரியது மட்டுமல்ல, புகழ்பெற்றதும் ஆகும். இந்த ஆலயங்களும் காபிடோலின் குன்றில் மன்னர்கள் கட்டிய மற்ற கட்டடங்களும் உலகில் ஒப்பரியது ரோம் என்பதைப் பறைசாற்றுகின்றன.
கி.பி. 1536-ஆம் ஆண்டு மைக்கேல் ஏஞ்சலோ இந்தச் சதுக்கத்தையும் சுற்றியுள்ள கட்டடங்களையும் மீண்டும் வடிவமைத்தார். சதுக்கத்திற்குச் செல்ல கிரானைட் கற்களாலான அழகான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகளையும், சதுக்கத்தையும் அற்புதமான சிலைகள் அலங்கரிக்கின்றன.
இந்தச் சதுக்கத்தில் நாவோ அரண்மனை, செனடோரியா மற்றும் கன்சர்வேடரியோ ஆகிய மூன்று முக்கிய அரண்மனைகள் உள்ளன. செனடோரியா அரண்மனை முதலில் கோட்டையாகக் கட்டப்பட்டு பின்னர் ரோம் நகர செனட் கூட்டம் நடக்கும் இடமாக இருந்தது.
கன்சர்வேடரியோ அரண்மனை ஓவியங்களும் சிற்பங்களும் நிறைந்த அருங்காட்சியகமாக உள்ளது. இங்குள்ள சிலைகளில் சக்கரவர்த்தி கான்ஸ்டான்டின், ரோமுலஸ், ரெமுஸ் சகோதரர்களுக்குப் பால் தரும் பெண் ஓநாய் சிலைகள் மிகவும் பிரபலமானவை.
டிரவி ஃபௌண்டன்: ரோம் நகரின் மையத்தில் அமைந்துள்ள அழகு மிளிரும் செயற்கை நீரூற்றுச் சுனையாகும். டிரவி சதுக்கத்தில் அமைந்துள்ள இதற்கு சலோன் சுனையிலிருந்து 20 கி.மீ. கால்வாயில் தண்ணீர் வரவழைக்கப்படுகிறது.
சுனையில் கடலின் கடவுளான நெப்டியூஸ், கடல் குதிரைகளால் இழுக்கப்படும் தேரில் அமர்ந்துள்ள சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
இடிபாடுகள்: பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரோமானியர்கள் வல்லமை மிக்க பேரரசை மட்டுமல்லாமல் ஆலயங்கள், கட்டடங்கள், சட்டமன்றங்கள், வெற்றி விழா வளைவுகள், பாதாளச் சாக்கடைகள் எனப் பல சிறப்புடன் ஒரு மகத்தான ஆட்சியை அமைத்திருந்தனர்.
ஜூலியஸ் சீசர், அகஸ்டஸ், ஹைட்ரியன், மார்க்ஸ் போன்ற மாமன்னர்கள் ரோமாபுரி என்ற ரோம் நகருக்கு வலிமை ஏற்படுத்தினர். இங்குள்ள ஃபோரம் ரோமானா என்னும் இடிபாடுகள் இதற்குச் சான்றாகும்.
பாந்தியன் கட்டடம்: சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பாந்தியன் கட்டடம் பிரம்மாண்டமான தூண்கள், பெரிய வெண்கலக் கதவு, சலவைக் கல் தரை ஆகியவை காண்போரைப் பிரமிக்க வைக்கிறது. ரோமன் ஆலயமாகக் கட்டப்பட்ட இக் கட்டடம் கி.பி. 600-இல் தேவாலயமாக மாற்றியமைக்கப்பட்டது. ஒவ்வொன்றும் சுமார் 60டன் எடையுள்ள கட்டடத் தூண்கள் எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட கற்களால் கட்டப்பட்டவை.
பாந்தியன் கட்டடத்தின் அருகில் உள்ள மற்றொரு கட்டடம் கான்ஸ்டாண்டின். தோரண வாயில் மற்ற புராதனக் கட்டடங்களிலிருந்து எடுக்கப்பட்ட கலைப்பொருட்கள் இதற்குப் பயன்படுத்தப்பட்டன.
வாடிகன் அருங்காட்சியகம்: இதனுள் பல அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளன. சலவைக் கல் தளங்கள், அலங்கரிக்கப்பட்ட உள்ளறைகள், விசாலமான சுற்றுப்பாதைகள், சுவர் ஓவியங்கள் ஆகியவை காண்போர் மனத்தைக் கொள்ளை கொள்வன.
வாடிகன் தலைமைப் பொறுப்பிலிருந்த புனித போப்பாண்டவர்கள் பாதுகாத்து வைத்த லட்சக்கணக்கான கலைக்கருவூலங்கள் இங்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. உலகப் புகழ்பெற்ற கலைஞர்களான மைக்கேல் ஏஞ்சலோ, டாவின்சி, ரஃபேல், பெர்னினி ஆகியவர்களின் படைப்புகளான ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் தந்தத்தால் உருவாக்கப்பட்ட கலைப்பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஆஞ்சலோ கோட்டை: முதலில் இது மன்னர் ஹட்ரியன் சமாதியாகத்தான் கட்டப்பட்டது. பின்னாளில் இதன் சுவர்கள் போப்பாண்டவரின் பாதுகாப்புக்காகப் பலப்படுத்தப்பட்டது. ஆர்லின் என்று அழைக்கப்பட்ட இந்தச் சுவர்கள் ரோம் நகரின் அரணாகத் திகழ்கிறது.
காரகல்லா: இந்தக் குளியல் அறைகள் செங்கற்களால் கட்டப்பட்டவை. கி.பி. 217-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்தன. ஒரே நேரத்தில் 1,600 பேர் இவற்றைப் பயன்படுத்த முடியும். இவைதவிர இங்கு நூலகம், உணவகங்கள், தோட்டங்கள், கலைக்கூடங்கள் அனைத்தும் இருந்தன. இப்போது அவை இடிபாடுகளாக இருந்தாலும் இன்றும் கண்டுகளிக்கத் தக்கவை.
அமைதி தேவதை ஆலயம்: ரோமப் பேரரசரான அகஸ்டஸ், தனது வெற்றிகளைக் குறிக்கும் வகையிலும், நாட்டில் அமைதி நிலவுவதை உணர்த்தும் வகையிலும் கட்டப்பட்ட ஆலயம். வெண் சலவைக் கல்லில் செதுக்கப்பட்ட ரோமனியச் சிற்பங்கள் பல கொண்டிருந்த இந்த ஆலயம் ரோம் நகரின் முக்கிய புராதனச் சின்னமாக விளங்குகிறது. ரோம் நகரைக் கண்டு களிக்க பல நாட்கள் ஆகும். இதனைச் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் என்றே கூறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.